விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுக்காவிட்டால் போராட்டம் 6 எம்.பி.க்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம்


விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுக்காவிட்டால் போராட்டம் 6 எம்.பி.க்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:00 AM IST (Updated: 29 Jun 2019 6:48 PM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுக்காவிட்டால் விவசாயிகளை இணைத்து போராட்டம் நடத்தப்படும் என சென்னிமலையில் 6 எம்.பி.க்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னிமலை, 

தமிழ்நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அம்மன் காட்டேஜில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க துணை பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் ஈசன், பவானி கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் வரவேற்று பேசினார். இதில், எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி (ஈரோடு), கே.சுப்பராயன் (திருப்பூர்), பி.ஆர்.நடராஜன் (கோவை), எஸ்.ஜோதிமணி (கரூர்), கே.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), கே.பி.சின்ராஜ் (நாமக்கல்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது அவர்கள் பேசுகையில், ‘தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காப்பாற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே முடியும்.

அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம். அதையும் மீறி செயல்படுத்தினால் தமிழகம் முழுவதும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்தாவிட்டால் எம்.பி.க்கள், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து திட்ட பணிகளை மாவட்டம் வாரியாக தடுப்பது

* கெயில் குழாய், பாரத் பெட்ரோலிய குழாய்களை சாலை ஓரமாக மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்

* பாண்டியாறு – புன்னம்புழா – ஆனைமலையாறு – நல்லாறு – திருமணியாறு – முத்தாறு நதிநீர் இணைப்பு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை போலீஸ் மூலம் மிரட்டி மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எந்த திட்டத்தையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டுகிறோம். இன்று (அதாவது நேற்று) நடந்த கூட்டத்தை பார்த்து போலீசாரை வைத்து விவசாயிகளை மிரட்டுவதை அதிகாரிகள் நிறுத்திக்கொள்வார்கள் என நினைக்கிறோம். அப்படி நிறுத்தாவிட்டால் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு உழவர்கள் பாதுகாப்பு இயக்கம், உயர்மின் கோபுரங்களுக்கான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், கெயில் மற்றும் பாரத் பெட்ரோலிய குழாய் திட்டத்தால் பாதிக்கப்படுவோர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் பகுதியை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story