நாகர்கோவிலில் தண்ணீர் வற்றாத கிணற்றை தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்


நாகர்கோவிலில் தண்ணீர் வற்றாத கிணற்றை தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 29 Jun 2019 11:00 PM GMT (Updated: 29 Jun 2019 3:00 PM GMT)

நாகர்கோவிலில் உள்ள தண்ணீர் வற்றாத கிணற்றை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சி 16–வது வார்டுக்குட்பட்ட இடலாக்குடி பகுதியில் வற்றாத கிணறு ஒன்று இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் தற்போதைய சூழலில் அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை சுத்தப்படுத்தி மக்களுக்கு வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக கிணற்று தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து கிணற்றை தூர்வாரும் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் போது கிணற்றில் இருந்து சிறிய அளவிலான சிவலிங்கம் சிலை கிடைத்தது. இந்த சிலையை மாநகராட்சி அதிகாரிகளிடம் தூர்வாரும் ஊழியர்கள் ஒப்படைத்தனர். மேலும் கிணற்றை சுற்றிலும் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதாவது குப்பைகள் அகற்றப்பட்டன.


இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேற்று காலை சம்பந்தப்பட்ட கிணற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் கிணற்றை தூர்வாரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தளவாய்சுந்தரத்திடம் ஒரு கோரிக்கை வைத்தனர். அதாவது கிணற்றின் அருகே ஓடும் கழிவுநீர் ஓடையை அகற்ற வேண்டும் என்றனர். இவற்றை கேட்டறிந்த அவர், மக்களின் கோரிக்கையை உடனே செயல்படுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயசந்திரன், ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story