ஒடுகத்தூர் அருகே மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் 3 பேர் கைது


ஒடுகத்தூர் அருகே மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2019 4:45 AM IST (Updated: 29 Jun 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூரை அடுத்த தொங்குமலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

அணைக்கட்டு,

ஒடுகத்தூரை அடுத்த தொங்குமலைப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் உத்தரவின் பேரில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, ஒடுகத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தொங்குமலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதியில் 3 நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மலைப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்தது தொங்குமலை பகுதியை சேர்ந்த குள்ளையன் (வயது 25), அவரது தம்பி அழகேசன்(24) மற்றும் முத்தனூர் சின்னஎட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story