விளைநிலங்களில் பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு தீ வைத்ததாக 2 பேர் கைது மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு


விளைநிலங்களில் பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு தீ வைத்ததாக 2 பேர் கைது மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Jun 2019 3:45 AM IST (Updated: 30 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே விளைநிலங்களில் எரி பொருட்களை கொண்டு செல்வதற்காக பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு தீ வைத்ததாக 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

சாலியமங்கலம்,

நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள எண்ணெய்சுத்தி கரிப்பு நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த எரிபொருட்கள் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதால் கூடுதல் செலவு, கால விரயம் ஏற்படு கிறது. இதையடுத்து பூமிக்கு அடியில் குழாய் பதித்து எண்ணெய் பொருட்களை கொண்டு செல்ல எண்ணை நிறுவனம் முடிவுசெய்தது.

அதன்படி நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குவரை பூமிக்கு அடியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே அருந்தவபுரத்தில் பூமிக்கு அடியில் குழாய் பதிப்பதற்காக இரும்பு குழாய்கள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு வயல் களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

தீ வைப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என விவசாயிகள் போராடி வரும் நிலையில் விளைநிலங் களில் எரிபொருட்களை கொண்டு செல்ல குழாய் பதிக்கக்கூடாது என விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர்கள் வயல்களில் போடப்பட்டு இருந்த குழாய்களுக்கு தீ வைத்தனர். இது குறித்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஏரியா மேலாளர் அஜீத்குமார் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

2 பேர் கைது

இந்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருக்கோவில்பத்து மேலத்தெருவை சேர்ந்த ரெங்கசாமி(வயது 60), உக்கடை முஸ்லிம் தெருவை சேர்ந்த மணிகண்டன்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கம்பர்நத்தத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் கோஷம்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ஜெகன், தொண்டரணி செயலாளர் தூயவன், மாநில இளைஞரணி பாசறை ஒருங்கிணைப்பாளர் மணி.செந்தில், வக்கீல் ஆனந்த் மற்றும் பொறுப்பாளர்கள் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.

அங்கு வந்த அவர்கள், கைதான இருவர் மீதும் பொய்வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு போலீசார் மறுத்ததால் நாம் தமிழர் கட்சியினர் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் கோஷம் எழுப்பி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story