நீடாமங்கலம் நகரில், போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்


நீடாமங்கலம் நகரில், போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:15 AM IST (Updated: 30 Jun 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் நகரில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்தும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்வது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

மேம்பாலம் அமைக்க நடவடிக்கை

நீடாமங்கலம் பகுதியில் தடையில்லா மின்சாரம் கிடைக்கவும், தனி மின்பாதை அமைக்கவும் துணை மின்நிலையம் அமைத்திட மின்வாரியம் எடுக்கும் நடவடிக்கைக்கு வர்த்தகர் சங்கம் உறுதுணையாக இருப்பது. நீடாமங்கலம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கிட மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது.

மோட்டார் சைக்கிள்களை கடைவீதிக்கு அருகில் தனியாக ஒரு இடம் ஒதுக்கி அதில் நிறுத்துவது. தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம் செல்லாமல் பைபாஸ் வழியாக புதிய பஸ் நிலையம் செல்கிறது. இதனால் நகர பகுதிக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்கள் பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் வகையில் தக்க நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்வது.

துணை மின் நிலையம்

நீடாமங்கலத்தில் துணை மின்நிலையம் அமைவதற்கும், நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைவதற்கும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகளின் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் துணைச்செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Next Story