சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் நாளை முதல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

நாமக்கல், 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கான பழைய டெண்டர் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் கடந்த 20-ந் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு வேலைநிறுத்தம் தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் திட்டமிட்டபடி சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது:-

அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஆயில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் ஆயில் நிறுவனங்கள் இதுவரை எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும்.

சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் பட்சத்தில் மங்களூரு, சென்னை உள்பட 5 எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தென்மண்டலங்களில் உள்ள 48 பாட்லிங் பிளாண்டுகளுக்கு சமையல் கியாஸ் கொண்டு செல்லும் பணி தடைபடும். இதனால் தமிழகம், கேரளா உள்பட 6 மாநிலங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே ஆயில் நிறுவனங்கள் சார்பில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story