இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் அதிகாரிகள் தகவல்


இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் அதிகாரிகள்  தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2019 3:30 AM IST (Updated: 30 Jun 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

இளம் விஞ்ஞானிகள் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்,

பள்ளி மாணவர்கள், மாணவ பருவத்திலேயே விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ‘இளம் விஞ்ஞானி விருது’ வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு அதில் சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவமாணவிகள் கலந்துகொள்ளலாம்.

இந்த விருதுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவமாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது தங்களின் அறிவியல் படைப்பு குறித்த தலைப்பை அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் சிறந்த மற்றும் தற்கால நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில் உள்ள தலைப்பை குறிப்பிட்ட மாணவரை தேர்வு செய்து ரூ.10 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

அந்த நிதியை கொண்டு மாணவர்கள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை உருவாக்க வேண்டும். பின்னர் மாவட்ட அளவியல் நடத்தப்படும் அறிவில் கண்காட்சியில் அவற்றை காட்சிப்படுத்த வேண்டும். அதில் சிறந்த படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படும். அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படைப்புகள் தேசிய அளவில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதுக்கான அறிவியல் படைப்புகளை உருவாக்க மாணவமாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை மாணவமாணவிகள் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் இளம் விஞ்ஞானி விருதுக்கு அதிக அளவில் மாணவமாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடந்த ஆண்டை விட திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவமாணவிகள் இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பிக்கும் வகையில் அவர்களிடம் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

Next Story