கும்பகோணம் அருகே விஷம் குடித்து ரோட்டில் மயங்கி கிடந்த பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதி


கும்பகோணம் அருகே விஷம் குடித்து ரோட்டில் மயங்கி கிடந்த பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 29 Jun 2019 10:15 PM GMT (Updated: 29 Jun 2019 6:57 PM GMT)

கும்பகோணம் அருகே விஷம் குடித்து ரோட்டில் மயங்கி கிடந்த பெண் போலீஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த பொன்னாவரையை சேர்ந்தவர் சுபாஷினி(வயது 30). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர், செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். பின்னர் அவர், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுபாஷினி கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து இவர் தினமும் கும்பகோணத்துக்கு பணிக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உமையாள்புரத்தில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த சுபாஷினியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷம் குடித்தார்

திருவையாறில், சுபாஷினி பணியாற்றியபோது மணல் கடத்தி வந்த சரக்கு வேனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், அது உயர் அதிகாரிகள் தலையீட்டால் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சுபாஷினி கும்பகோணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது நேர்மையாக பணியாற்றியமைக்கு கிடைத்த பரிசா? என சுபாஷினி மனமுடைந்து புலம்பி வந்த நிலையில், அவர் பணிக்கு செல்லும் போது விஷம் குடித்ததாகவும், அதே நேரத்தில் சுபாஷினிக்கும், திருவையாறு துணை தாசில்தாருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் குடித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story