முகநூல் மூலம் அறிமுகமாகி காதல்: சேலம் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போலீசார் மீட்டு பெற்றோருடன் அனுப்பினர்


முகநூல் மூலம் அறிமுகமாகி காதல்: சேலம் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போலீசார் மீட்டு பெற்றோருடன் அனுப்பினர்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:15 AM IST (Updated: 30 Jun 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முகநூல் மூலம் அறிமுகமான, கல்லூரி மாணவியை காதலித்து கடத்திய வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கல்லூரி மாணவியை போலீசார் மீட்டு அவரது பெற்றோருடன் அனுப்பினர்.

சேலம், 

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அப்போது, கல்லூரி மாணவியை முகநூல் (பேஸ்புக்) மூலமாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர், அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்று பெற்றோருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசில் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மாணவி பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவர் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஆனால் போலீசார் தேடி வருவதை அறிந்த அந்த வாலிபர், வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் போலீ்ஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அந்த மாணவியுடன் தஞ்சம் அடைந்தார். அப்போது, அவர்கள் தாங்கள் 3 ஆண்டுகளாக முகநூல் மூலமாக காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சேலம் போலீசாரிடம் கல்லூரி மாணவியையும், அந்த வாலிபரையும் அங்குள்ள போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர், பிளஸ்-2 படித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருவதும், இதற்கு முன்பு மைனர் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதும், ஊர் பஞ்சாயத்து பேசி அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் பற்றி கல்லூரி மாணவியிடம் போலீசார் தெளிவாக கூறினர்.

இதையடுத்து ஆசை வார்த்தை கூறியதால் தெரியாமல் அவருடன் சென்றுவிட்டதாகவும், பெற்றோருடன் செல்ல தயாராக இருப்பதாகவும் போலீசாரிடம் அந்த மாணவி தெரிவித்தார். பின்னர் போலீசார் அந்த கல்லூரி மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story