சேலம் மாநகராட்சி சார்பில் தண்ணீரை சேமிக்கும் வழிமுறை குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்
சேலம் மாநகராட்சி சார்பில் தண்ணீரை சேமிக்கும் வழிமுறை குறித்து துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே தண்ணீரை வீணாக்காமல் சேமிக்கும் வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அஸ்தம்பட்டி மண்டலம் 14-வது வார்டு சென்னகேசவபுரம் பகுதியில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு தண்ணீரை வீணாக்காமல் சேமிக்கும் வழிமுறை குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோரிடம் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த துண்டு பிரசுரங்கள் மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மூலம் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் மாநகரப்பகுதிகள் முழுவதும் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் குடிநீர் வினியோகத்தினை கண்காணிப்பதற்காக 8 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் பயன்படுத்தும் முறைகளில் மாற்றம் கொண்டுவரும் போது நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 300 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குடிநீரினை பிற தேவைகளுக்கு பயன்படுத்தாமல் சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் சுந்தரராஜன், பாஸ்கரன், கவிதா, ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் திலகா, சுகாதார அலுவலர்கள் மணிகண்டன், ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story