குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

போதிய மழையின்மை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டு ஏரி, குளங்கள் தண்ணீரின்றி பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 16- வது வார்டான பெரியார் சிலை பின்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லையாம்.

இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழாய்களில் வினியோகிக்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி பொதுமக்கள் தெருவில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் பெரம்பலூர்- ஆத்தூர் நெடுஞ்சாலையில் காமராஜர் வளைவு அருகே சென்றனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பெண்கள் தலையில் காலிக்குடங்களை சுமந்துவாறு, குடிநீர் பிரச்சினையை தீர்க்க நகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நித்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அரை மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.

Next Story