பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் சிறப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் சிறப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2019 4:15 AM IST (Updated: 30 Jun 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுடன் நடந்த சிறப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில், உயர் அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் 2-வது சிறப்பு கூட்டம் நடந்தது. இதற்கு சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ஜெய்னுலாப்தீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சர்க்கரை கழக பொது மேலாளர் விஜயா முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) சுந்தர்ராஜன் வரவேற்றார். கூட்டத்தில் சர்க்கரை ஆலை அதிகாரிகள் கூறுகையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் சர்க்கரை இருப்பு ரூ.50 கோடிக்கு உள்ளது.

2018-19-ம் ஆண்டு விவசாயிகள் வெட்டிய கரும்புக்கு அரசு தரவேண்டிய மீதி பாக்கித் தொகை வரும் ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்பட்டு விடும். வரும் 2019-20-ம் ஆண்டுக்கான அரவை பருவத்தில் ஆலையில் பழுது ஏற்படாமல் திட்டமிட்டபடி ஆலையை இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம் என்றனர். மேலும் கூட்டத்தில் கரும்பு சர்க்கரை சத்து குறையாத அளவில் ஆலையின் பிழிதிறன் தொழில் நுட்பத்தை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

கூடுதலாக 1 லட்சம் டன்...

இணை மின் திட்டத்திற்கு விவசாயிகள் வழங்கிய பங்குத்தொகைக்கு இந்த ஆண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிடும் என்று ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

2019-20-ம் ஆண்டுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். 2019-20-ம் ஆண்டுக்கு கரும்பு 2 லட்சத்து 10 ஆயிரம் டன் அரைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் டன் கூடுதலாக கரும்பு எடுப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும். தலைமை சர்க்கரை கழகத்திலிருந்து 3 மாதத்திற்கு ஒரு முறை உயர் அதிகாரிகள் ஆலைக்கு வருகை தந்து விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். சர்க்கரை ஆலையை சிறப்பாக இயக்குவதற்கு நிரந்தர தொழிலாளர்களையும், கரும்பு விரிவாக்க அலுவலர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும். 2014 முதல் 2017 வரை வெட்டிய கரும்புக்கு அரசு தரவேண்டிய டன்னுக்கு ரூ.450-ஐ உடனடியாக வழங்க வேண்டும். நிலத்தடி நீர் குறைந்ததால் கரும்புகளை காப்பாற்ற கூடுதலாக ஆழ்குழாய் போர் போட ரூ.5 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லா நீண்டகால கடன் வழங்க வேண்டும். வெட்டுக் கூலியை ஆலை மூலமாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் எந்திரத்தை கூடுதலாக பயன்படுத்த வேண்டும். அதற்கு அகலப்பார்களை அமைக்கவேண்டும் என்றனர்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதில் தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, நிர்வாக அலுவலர் குமாரராஜா, கரும்பு விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளான ஞானமூர்த்தி, சீனிவாசன், ராஜேந்திரன், ராமலிங்கம், முருகேசன், பெருமாள், பழனிவேல், பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story