மழைநீர் சேகரிப்பு திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு


மழைநீர் சேகரிப்பு திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2019 5:00 AM IST (Updated: 30 Jun 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் நோக்கமாகும். நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள கட்டமைப்புகளை பழுதுநீக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றுதல் போன்ற செயல்பாடுகளை மாவட்டத்தில் மிகவும் துரிதமாக செயல்படுத்த வேண்டும். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்கள் சுந்தரேசன், ராமகிரு‌‌ஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story