மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி என ரூ.37¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாற்றுத் திறானாளிகளான 255 பேருக்கு ரூ.37 லட்சத்து 80 ஆயிரத்து 854 மதிப்பிலான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், நவீன மடக்கு குச்சி, பிரெய்லி கைகடிகாரம், காதொலிக்கருவி, கை-கால் பாதிக்கப்பட்டோருக்கு முடநீக்கு சாதனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் சமுதாய நலப்பணிகள் திட்டத்தின் கீழ் வேட்டமங்கலம் ஊராட்சி நொய்யல் பகுதியில் புதிய பூங்கா அமைக்க ரூ.5 லட்சத்து 18 ஆயிரம், பரமத்தியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை காதித ஆலை நிர்வாகிகள், போக்குவரத்துத்துறை அமைச்சர் மூலமாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையின் செயல் இயக்குனர் கிருஷ்்ணன், முதன்மை பொது மேலாளர்கள் பட்டாபிராமன், தங்கராஜ் மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், குளித்தலை ஒன்றிய செயலாளர் டி.வி.விஜய விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேட்டி

அதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், அம்மா குடிநீர் அமைச்சர் வீட்டுக்கு செல்கிறதா? அதிகாரிகளுக்கு செல்கிறதா? என தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அந்த மாதிரியான தவறுகளை என்றைக்கும் நாங்கள் செய்ய மாட்டோம். குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்திற்கு என ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உள்ளது. அது முடிவடைந்து விட்டதாலும், சில சுத்திகரிப்பு எந்திரங்களில் பழுதுபாக்கும் பணி உள்ளிட்ட மராமத்து பணிகள் நடப்பதாலும் அம்மா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி குறைந்து வருகிறது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் வினியோகத்திற்கு நவீன எந்திரங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. பஸ் நிலையங்கள் மட்டுமின்றி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று 6 அரசு பொது மருத்துவனைகளிலும் அம்மா குடிநீர் வழங்கப்படுகிறது. கரூர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் வழங்குவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவது பற்றி முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளோம். விரைவில் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகத்தின் தரம் குறித்து புகார் வந்தால், நானும் கலெக்டரும் உடனடியாக திடீர் ஆய்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story