விழுப்புரத்தில் அரசு ஊழியரின் கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதம்
விழுப்புரத்தில் அரசு ஊழியரின் கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வி.ஜி.பி. நகரில் வசித்து வருபவர் குப்புசாமி (வயது 33). இவர் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் எதிரே தன்னுடைய கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அதிகாலை இவருடைய கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். குப்புசாமி மீது இருந்த காழ்புணர்ச்சி காரணமாக யாரேனும் மர்ம நபர்கள், வாகனங்களை தீ வைத்து எரித்து விட்டனரா? அல்லது கார் பேட்டரியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story