மதுரையில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி சாவு அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு


மதுரையில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி சாவு அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jun 2019 5:00 AM IST (Updated: 30 Jun 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை,

மதுரை பழங்காநத்தம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவருடைய மகன் மணிகண்டன்(வயது 26). ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை கரிமேடு பகுதியில் உள்ள ஆட்டோ நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கரிமேடு ஆட்டோ நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது மணிகண்டனுக்கும், அங்கிருந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிப்போய் மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்த மோதல் குறித்து சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கரிமேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட மணிகண்டன் உள்பட சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டனை போலீசார் மயக்கமான நிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவறிந்த மணிகண்டனின் உறவினர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அங்கு இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள், ‘‘போலீசார் தான் மணிகண்டனை அடித்தே கொன்று விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று கூறினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் “மணிகண்டன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. கரிமேடு ஆட்டோ நிலையத்தில் நடந்த மோதல் தொடர்பாக மணிகண்டன் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார்.திடீரென்று அவர், நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

எனவே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்” என்றனர்.

Next Story