53 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு


53 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 30 Jun 2019 3:45 AM IST (Updated: 30 Jun 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 53 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, சுப்பிரமணியன், கே.சி.பாண்டியன், அயிலை சிவ.சூரியன், வீரசேகரன், சின்னத்துரை, ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துறையூர் அருகே உள்ள திண்ணனூரை சேர்ந்த விவசாயி ஞானசேகர் தனது நிலத்தில் விளைந்த கம்பு பயிருடன் வந்து, கம்பு பயிர் செய்த இடத்தில் மயில்களும், குரங்குகளும், காட்டுப்பன்றிகளும் வந்து நாசம் செய்கின்றன. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் முறையிட்டார். மேலும் தற்போது நிலவி வரும் வறட்சியால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வழிகாணவும், காவிரியில் தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்ததாவது:-

ரூ.6 கோடியே 19 லட்சம் ஒதுக்கீடு

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு மற்றும் விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆண்டிற்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2019-20-ம் ஆண்டில் இரண்டாவது தவணையாக சிறு, குறு விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,25,070 சிறு, குறு விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுபட்டுள்ள விவசாயிகள் வருகிற ஜூலை 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு 53 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6 கோடியே 19 லட்சத்து 85 ஆயிரம் நிதி ஒதுக்கி உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ஏரி குளங்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற கனிம வளங்களை விவசாய பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லுவதற்கு 52 ஏரிகளில் கனிம வளங்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.

நெற்பயிர் காப்பீடு

காரீப் பருவ பயிர்களான நெல் பயிருக்கு ஏக்கருக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய பிரிமியத் தொகை ரூ.650 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி ஆகும். துவரை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.315 பிரிமியத் தொகை செலுத்த வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30-ந் தேதி ஆகும். நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ.520 செலுத்த கடைசி நாள் 30.09.2019. பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ.1,365 செலுத்த கடைசி நாள் 31.08.2019, பிர்கா பயிர்களான சோளம் பயிருக்கு பிரிமியத் தொகை ரூ.206 செலுத்த கடைசி நாள் 30.09.2019, கம்பு பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ.182 செலுத்த கடைசி நாள் 30.09.2019 ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டம்) பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story