கவரிங் நகை வியாபாரி வீட்டில் திருடிய 3 பேர் கைது நகைகள் பறிமுதல்


கவரிங் நகை வியாபாரி வீட்டில் திருடிய 3 பேர் கைது நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

கவரிங் நகை வியாபாரி வீட்டில் திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை புதுசாரம் கவிக்குயில் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 47). கவரிங் நகை வியாபாரி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை அவரது மனைவி கவனித்து வந்தார்.

சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜன் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூஜை அறையில் இருந்த 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15 பவுன் நகை, ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குற்றாவளிகளை தேடிவந்தனர்.

ராஜனின் வீட்டைப்பற்றி தெரிந்தவர்களே இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். அந்த அடிப்படையில் விசாரணையை தொடங்கினார்கள்.

அப்போது ராஜனின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெயிண்டிங் வேலை நடந்தது தெரியவந்தது. அந்த வேலையில் பாக்குமுடையான்பட்டு பொய்யாகுளத்தை சேர்ந்த ராம்பிரபு என்ற சதீஷ் (24) ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில் ராம்பிரபு தனது நண்பர்களான வெண்ணிலா நகரை சேர்ந்த சேகர் (19), புதுசாரம் முத்துரங்கசெட்டியார் தெருவை சேர்ந்த திலீப்குமார் (23) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

ராஜன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்துகொண்ட இவர்கள் பக்கத்துவீட்டின் மாடி வழியாக ஏறி குறித்து ராஜனின் வீட்டிற்குள் புகுந்து நகை பணத்தை திருடியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 15 பவுன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜூ, ராஜா, அரிபிரசாத், ஜெயகுமார் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.

Next Story