நாடாளுமன்ற தேர்தலில் எனது குடும்பத்தில் 3 பேர் போட்டியிட்டதற்கு மக்கள் தகுந்த தண்டனை கொடுத்து விட்டார்கள் தேவேகவுடா பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் எனது குடும்பத்தில் 3 பேர் போட்டியிட்டதற்கு மக்கள் தகுந்த தண்டனை கொடுத்து விட்டார்கள் தேவேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 30 Jun 2019 3:15 AM IST (Updated: 30 Jun 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் எனது குடும்பத்தில் 3 பேர் போட்டியிட்டதற்கு மக்கள் தகுந்த தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை மாநிலத்தில் பலப்படுத்துவது மற்றும் தேவேகவுடா மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் தேவேகவுடா ஆலோசித்தார்.

இந்த கூட்டத்தில் தேவே கவுடா பேசியதாவது:- ஜனதாதளம்(எஸ்) ஒரு குடும்ப கட்சி என்று கூறி வருகிறார்கள். நான் என்றும் குடும்ப அரசியலில் ஈடுபட்டதில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளேன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட கூடாது என நினைத்தேன். ஆனால் இறுதியில் நான் போட்டியிட வேண்டிய சந்தர்ப்பம் உருவானது. அதே நேரத்தில் சில காரணங்களுக்காக என்னுடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதங்கள் நடந்தது. எனது குடும்பத்தில் 3 பேர் போட்டியிட்டதற்காக நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த தண்டனையை கொடுத்து விட்டார்கள். இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிலாக கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். கட்சியை பலப்படுத்துவதற்காக பாதயாத்திரை செல்ல உள்ளேன். என்னுடைய பாதயாத்திரையால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனது வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். நான் இல்லையென்றாலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி துடிப்புடன் தான் இருக்கும். கட்சியை வளர்க்க இளைஞர்கள், நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

நிகில் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், அவரது சக்தியை மீறி தேர்தல் பணியாற்றினார். கட்சியை வளர்க்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார். மக்களிடையே நிகில் குமாரசாமிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

Next Story