பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் 200 வாழைகள் நாசம்
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் நாசம் ஆனது.
பவானிசாகர்,
பவானிசாகர் வனப்பகுதிக்கு உள்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்தையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டுள்ள பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விளாமுண்டி வனப்பகுதியை விட்டு 2 யானைகள் வெளியேறி கரிதொட்டம்பாளையம் கிராமத்துக்குள் வந்தன. பின்னர் 2 யானைகளும் அந்த பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 64) என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின.
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு தோட்டத்தில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த ரங்காசமி விழித்தெழுந்து பார்த்தார். அப்போது 2 யானைகளும் அவருடைய தோட்டத்தில் நின்றுகொண்டு வாழைகளை முறித்து தின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். எனினும் தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 200–க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை நாசப்படுத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது. எனவே யானைகளால் நாசப்படுத்தப்பட்ட பயிர்களுக்குண்டான உரிய இழப்பீட்டை அரசிடம் இருந்து பெற்றுத்தர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
–