“மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் நிலை வந்தால் அ.தி.மு.க. குரல் கொடுக்கும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


“மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் நிலை வந்தால் அ.தி.மு.க. குரல் கொடுக்கும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 1 July 2019 4:15 AM IST (Updated: 30 Jun 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் நிலை வந்தால் அ.தி.மு.க. குரல் கொடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி, 

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதி இல்லை. அவர் தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் மு.க.ஸ்டாலின் பற்றி வேண்டுமானால் பேசலாம். ஜெயலலிதாவின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அ.தி.மு.க.வில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நாங்கள் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு இந்த அரசு நடைபெற்று வருகிறது. ஆகையால் தான் இன்றைக்கும் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படவில்லை.

ஜி.எஸ்.டி. வரி வரும்போது பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும், இன்று ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அதில் பிரச்சினை இருந்தால் கூறலாம். ஆனால் திட்டம் வருவதற்கு முன்பே வைகோ குறை கூறுவது சரியல்ல. வைகோவிற்கு எம்.பி. பதவி தி.மு.க. வழங்க உள்ளது. அதற்காக அவர்களை திருப்திப்படுத்த இப்படி பேசியிருக்கலாம்.

மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் நிலை வந்தால் அ.தி.மு.க. குரல் கொடுக்கும். தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு செல்லவில்லை. அ.ம.மு.க.வில் இருந்து சென்றுள்ளார். இதுபற்றி டி.டி.வி. தினகரன் தான் விளக்கம் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story