கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது இயக்குனர் கவுதமன் பேட்டி
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்று இயக்குனர் கவுதமன் கூறினார்.
கடையம்,
நெல்லை மாவட்டம் கடையத்திற்கு தமிழ் பேரரசு கட்சி தலைவரும், திரைப்பட இயக்குனருமான கவுதமன் நேற்று வந்தார். அவர் ராமநதி அணையை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநதி அணை சிதிலமடைந்த காணப்படுகிறது. எனவே உடனே இதனை தூர்வார வேண்டும். தமிழ் இனத்தின் தேசிய மரமான பனை மரத்தையும், பனைத் தொழிலையும் பாதுகாப்பதோடு, பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனைப்பொருட்கள் அரசுக்கு நல்ல வருமானத்தை வழங்கியது. தற்போது அமைச்சர்கள் நீர்மேலாண்மையில் கவனம் செலுத்துவது கிடையாது. விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. இதனால் பாதிப்பு இல்லையென்றால் உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் அமைக்கலாம். தமிழகம் குப்பை தொட்டி அல்ல. இங்கு அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது. ஆணவக் கொலை, சிறுமிகள் பாலியல் கொலையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரே தேசம் ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நித்திய கல்யாணி அம்மன் கோவில் முன்பு உள்ள ஓடைகளின் கரையில் பனைவிதைகளை அவர் விதைத்தார். முன்னதாக கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே உள்ள அருந்ததியர் காலனியில் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.
Related Tags :
Next Story