அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் தளவாய் சுந்தரம் தகவல்


அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் தளவாய் சுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 1 July 2019 4:30 AM IST (Updated: 1 July 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தென்தாமரைகுளம்,

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தென்தாமரைகுளம் சந்திப்பில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார்.

இலக்கிய அணி செயலாளர் கவிஞர் சதாசிவம் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து பேசினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 236 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 106 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த பணிக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். கன்னியாகுமரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் தற்போது கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட தொடங்கினால் இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றிலும் தீர்வு ஏற்படும். எனவே யார் தடுத்தாலும் இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முற்றிலும் நிறைவடையும்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் கைலாசம், நிர்வாகிகள் தம்பி தங்கம், சுந்தர் சிங், வலிய பெருமாள் அரசு, தங்க நாடார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி தலைவி பொன் பன்னீர் செல்வி நன்றி கூறினார்.

Next Story