திருமங்கலம்-செங்கோட்டை 4 வழிச்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு


திருமங்கலம்-செங்கோட்டை 4 வழிச்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 1 July 2019 3:00 AM IST (Updated: 1 July 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம்- செங்கோட்டை 4 வழிச்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வாசுதேவநல்லூர்,

திருமங்கலம்- ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலைகள் அமைத்திட நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகாவில் இனாம் கோவில்பட்டி, நாரணபுரம் பகுதி-1,2, ராமநாதபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் நிலம் கையப்படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. பின்னர் அடுத்த கட்டமாக நில உரிமைதாரர்களிடம் இருந்து ஆட்சேபனை மனுக்கள், சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்டது. இதில், 4 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பலர் தங்களது ஆட்சேபனைகளை மனுக்களாக கொடுத்தனர். 4 வழிச்சாலை நிலஎடுப்பால் இருபோக விவசாயம் பாதிக்கப்படும். விவசாய குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழக்க நேரிடும். எனவே மாற்றுப்பாதையில் சாலை அமைக்கும்படி மனுக்களில் கூறியிருந்தனர்.

இருப்பினும், திருமங்கலம்- செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தில் மாற்றுப்பாதை அமைக்க இயலாது என அதிகாரிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் திருமங்கலம்- செங்கோட்டை நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றியமைப்பு சங்கம் சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருமங்கலம்- செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தால் சிவகிரி தாலுகா பகுதிகளில் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story