‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி


‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி
x
தினத்தந்தி 1 July 2019 4:30 AM IST (Updated: 1 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

நாகர்கோவில்,

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள் ளது. இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் பன்முக தன்மைக்கு எதிரானது. ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நாடு முழுவதும் செயல்படுத்தும் வகையில் இது போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்த திட்டங்களை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக்க முயற்சி நடக்கிறது. அங்கு அணுக்கழிவு மையத்தை செயல்படுத்தக்கூடாது. இந்த அணு உலை தென் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கே பேராபத்து தான். பொது மக்களின் நலன் கருதி இத்திட்டத்துக்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

தேசிய பேரிடர்

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஏற்கனவே நிபுணர்கள் கூறியதை அரசு கண்டுகொள்ள வில்லை. அதனை சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எதிர்க்கட்சிகள் தண்ணீர் பிரச்சினைக்காக போராடிய பிறகு தான் அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தண்ணீர் பிரச்சினைக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் தற்போது நிலவும் குடிதண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான முயற்சியை மாநில அரசு எடுக்க வேண்டும். த.மு.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஹைதர் அலி தலைமைக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள் ளார். அவர் த.மு.மு.க. பெயரையோ, கொடியையோ பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் காதர்மொய்தீன், மாநில செயலாளர் இஸ்டி முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story