ஓசூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்த என்ஜினீயர், மனைவி உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
ஓசூரில் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயர், அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று 2-வது நாளாக தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா சந்திராம்பிகை ஏரியில் நேற்று முன்தினம் ஆண் மற்றும் பெண் ஆகிய 2 பேரின் உடல்கள் மிதந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 31), அவரது மனைவி கல்பனா (27) என தெரிய வந்தது. கண்ணன் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்ததும், கேரளா மாநிலத்திற்கு பணி இடமாறுதல் ஆகி உள்ளதாக கடந்த 26-ந் தேதி தாய் முத்தம்மாளிடம் போனில் கண்ணன் பேசியதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தான் அவர்கள் ஓசூரில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் கண்ணன்-கல்பனா தம்பதியின் 2 வயது மகன் கபிலனின் காலணி மற்றும் கண்ணனின் மோட்டார்சைக்கிள் ஏரிக்கரை அருகில் இருந்தன. இதனால் குழந்தையை ஏரியில் வீசி விட்டு பின்னர் கணவன்-மனைவி குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் குழந்தையின் உடலை தேடும் பணி நேற்று முன்தினம் நடந்தது. 2-வது நாளாக நேற்று போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் குழந்தையின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையை அவர்கள் ஏரியில் வீசினார்களா? அல்லது வேறு எங்கும் விட்டார்களா?. குழந்தையின் கதி என்ன? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கண்ணன்-கல்பனா ஆகிய 2 பேரின் உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடன் தொல்லை காரணமாக அவர்கள் இந்த துயர முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story