வேதாரண்யத்துக்கு படகில் வந்த இலங்கை வாலிபர்கள் 3 பேர் கைது மீன்பிடி வலை-டீசல் கேன்கள் பறிமுதல்


வேதாரண்யத்துக்கு படகில் வந்த இலங்கை வாலிபர்கள் 3 பேர் கைது மீன்பிடி வலை-டீசல் கேன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jun 2019 11:15 PM GMT (Updated: 30 Jun 2019 6:57 PM GMT)

வேதாரண்யத்துக்கு படகில் வந்த இலங்கை வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மீன்பிடி வலை, டீசல் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா ஆகியவை கடத்தி செல்லப்படுகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலில் சந்தகப்படும் வகையில் ஒரு படகில் வெளிநபர்கள் இருப்பதாக நாகை மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் தலைமையில் போலீசார் வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகு கரையை நோக்கி வந்தது. அந்த படகில் இருந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும் கடலில் குதித்தனர். கடலில் குதித்த 3 பேரில் ஒருவர் ஆறுகாட்டுத்துறையில் கரை சேர்ந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், இலங்கை திரிகோணமலை மாவட்டம், துர்க்காவா நகரை சேர்ந்த அப்துல்ரசல் மகன் ரிகாஷ் ( வயது23) என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து புதிய பைபர் படகு, புதிய என்ஜின், படகில் இருந்த மீன்பிடி வலைகள், டீசல் கேன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ரிகாசை கியூ பிரிவு போலீசார் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட படகில் சிங்கள எழுத்துகள் எழுப்பட்டிருந்தன. மேலும் ஆங்கிலத்தில் ஜிவிந்தா மரைன் என்று எழுதப்பட்டு இருந்தது. தப்பியோடிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோடியக்கரை பகுதியில் இருந்து வேதாரண்யத்துக்கு அரசு பஸ்சில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் மகன் வசிகரன் (20), திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த முகமதுநிசார் மகன் முகமது ரசீஷ் (30) என்பதும், இவர்கள் தான் படகில் இருந்து குதித்து தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

தொடர்ந்து 2 பேரையும கைது செய்தனர். இவர்களிடம் இருந்து செல்போன்கள், இலங்கை நாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் நாகை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான 3 பேரும் இலங்கை மீனவர்களா? அல்லது போதை பொருள், தங்கம் கடத்தி வந்தார்களா? இலங்கை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story