ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் சுற்றித்திரியும் 2 யானைகள்
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் 2 யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் கிராமமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.
இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து 2 யானைகள் பிரிந்து மீண்டும் ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு கெலவரப்பள்ளி அணை பகுதியில் புகுந்துள்ளன. அந்த 2 யானைகளும், அணையில் உற்சாக குளியல் போட்டன. 2 யானைகளும் அணை பகுதியில் சுற்றி திரிவதால், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 யானை கள் நடமாடி வருவதால், அணையை சுற்றியுள்ள நந்திமங்கலம், கெலவரப்பள்ளி, சித்தனபள்ளி, ஆவலப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதற்கிடையில், நேற்று மாலை அந்த 2 யானைகளையும் பட்டாசு வெடித்து மீண்டும் பேரண்டபள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story