108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 1 July 2019 4:45 AM IST (Updated: 1 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி,

தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின்படி மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் சுமார் 5 லட்சம் புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 80 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் 15 ஆயிரம் நோயாளிகள் வரை மருத்துவமனைகளில் குடிநீர் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கான அதிகாரம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக உள்ளது. 930 ஆம்புலன்ஸ்கள் ஜி.பி.எஸ். கருவியுடன் இயக்கப்பட்டு வருகின்றன. அதனை ஆயிரம் ஆம்புலன்சாக உயர்த்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்கள் செயல்படுகிறது. ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை மாற்றுவதற்காக தனி ஆம்புலன்ஸ்கள் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய கேபினட் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.1,524 கோடியில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து உள்ளனர். மதில்சுவர் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கட்டுமான பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. தமிழக அரசும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story