நெமிலியில் ஜமாபந்தி நிறைவு விழா: 53 ஏரிகள் தூர்வார ரூ.12 கோடி ஒதுக்கீடு கலெக்டர் பேச்சு


நெமிலியில் ஜமாபந்தி நிறைவு விழா: 53 ஏரிகள் தூர்வார ரூ.12 கோடி ஒதுக்கீடு கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 1 July 2019 4:45 AM IST (Updated: 1 July 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 53 ஏரிகள் தூர்வார ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நெமிலியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கலெக்டர் ராமன் பேசினார்.

பனப்பாக்கம்,

நெமிலி வட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பாக்கம் உள்வட்டத்தை சார்ந்த 19 வருவாய் கிராமங்கள், நெமிலி உள்வட்டத்திற்கு உட்பட்ட 19 வருவாய் கிராமங்கள் மற்றும் பனப்பாக்கம் உள்வட்டத்திற்கு உட்பட்ட 37 வருவாய் கிராமங்களுக்கு 1428-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழா நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி 612 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மழை பொழிவு இல்லாது போனதால் மக்கள் தண்ணீர் தட்டுப்பாடுக்்கு ஆளாகியுள்ளனர். இருந்த போதிலும் மக்களின் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உடனுக்குடன் அறிந்து அவற்றை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளிலும் மாவட்ட நிர்வாகம் செயலாற்றி வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் நிலத்தடி நீரை சேமித்து வைத்தால்தான் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே அனைத்து பகுதி மக்களும் தங்களுடைய வீடுகளில் மரக்கன்றுகளை நடவேண்டும் மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். ஜமாபந்தி மூலம் இலவச மனைப்பட்டா பெற்றவர்கள் குறைந்தது 2 மரக்கன்றுகளையாவது நடவேண்டும்.

முதல்-அமைச்சரால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்துப்பணி சிறப்பு வாய்ந்த பணி. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறையின் வாயிலாக ஏரி உபயோகிப்பாளர் சங்கத்தின் மூலம் 53 ஏரிகள் தூர்வார ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஏரிகள் தூர்வாரப்படும்.

அதேபோல் ஒவ்வொரு பகுதி மக்களும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அந்தந்த வட்ட அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் விவசாயிகள் தரமான வண்டல் மண் உள்ள ஏரிகளை தேர்வு செய்து வண்டல் மண் எடுத்துக் கொள்ள செயல் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நெமிலியில் அரசு மருத்துவமனை, நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் மற்றும் கருவூல அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, பா.சம்பத், நெமிலி தாசில்தார் சதி‌‌ஷ், இணை இயக்குனர் (வேளாண்மை) சுப்புலட்சுமி, அ.தி.மு.க. நெமிலி ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஜி.விஜயன், அருணாபதி, மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் சுபா‌‌ஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story