வேலூரில் குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சப்-இன்ஸ்பெக்டர்


வேலூரில் குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 1 July 2019 5:00 AM IST (Updated: 1 July 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு குற்றவாளிகளுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்குப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செல்வராஜ். இவர் இதற்கு முன்பு வேலூர் தெற்கு போலீஸ்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். வேலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரவில் கஸ்பாவில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலையில் வைத்து தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். செயின் பறிப்பு, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சிலரும் உடனிருந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், காகிதப்பட்டறையில் நிதிநிறுவன உரிமையாளர் நந்தகுமார் (வயது24) என்பவர் கடந்த மே மாதம் 7-ந் தேதி கடத்தப்பட்ட வழக்கில் தொரப்பாடியை சேர்ந்த கருப்பு ஜெகதீ‌‌ஷ், ஸ்கெட்ச் பரத், தமீம் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. 7-ந்தேதி நந்தக்குமாரை கடத்துவதற்கு முன்பு 3-ந் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் விழாவில் 3 பேரும் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் கருப்பு ஜெகதீ‌‌ஷ் என்பவர் செயின் பறிப்பு வழக்கில் கைதானவர் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள்விழாவில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கலந்துகொண்டதாக புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story