சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றது ஏன்? விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றது ஏன்? என்று விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவராகவும், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராதாமணி கடந்த 14-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவருடைய நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை அவரது சொந்த ஊரான விழுப்புரம் அருகே உள்ள கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.
விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ராதாமணியின் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்குள்ள மந்தக்கரை திடலில் நடந்த நிகழ்ச்சியில் ராதாமணியின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ராதாமணியின் மரணம் ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். யாருமே எதிர்பாராத வகையில் அகில இந்திய அளவில் நரேந்திரமோடி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை அது நடக்காத ஒரு சூழல் அமைந்திருக்கிறது. தமிழக மக்களால் தான் அந்த வெற்றி நமக்கு கிடைத்திருக்கிறது.
என்னதான் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் இன்றைக்கும் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒரு குறை இருக்கிறது. அது என்னவென்றால் இந்த ஆட்சி இன்னும் இருக்கிறதே என்று. அதற்கான காலம் விரைவில் வரும், யாரும் கவலைப்படாதீர்கள்.
ராதாமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் உறுதியோடு சொல்கிறேன், ராதாமணி எந்தளவிற்கு உணர்வோடு பாடுபட்டாரோ அதே உணர்வுடன் நாம் எல்லோரும் பாடுபட்டால் நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சி விரைவில் கவிழும்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த போவதில்லை என்று நான் கூறியதை ஊடகத்தினர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சட்டசபையில் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அதனை கூறினேன். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றோம். உச்சநீதிமன்றமும் அதை புரிந்துகொண்டு எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டது.
ராஜதந்திரத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆனால் சிலர் பதுங்கி விட்டதாகவும், பயந்து ஓடி, ஒளிந்து விட்டதாகவும் கூறி வருகின்றனர். புலி பதுங்குவது பாய்வதற்குத்தான். ஓடி, ஒளிவதற்காக அல்ல. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம், முடிவு கட்ட வேண்டிய நேரத்தில் முடிவு கட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story