பாரதி பூங்காவில் புல்தரை அமைக்கும் பணி மும்முரம்


பாரதி பூங்காவில் புல்தரை அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 30 Jun 2019 10:30 PM GMT (Updated: 30 Jun 2019 10:01 PM GMT)

புதுவை பாரதி பூங்காவில் புல்தரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி,

புதுவையின் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக பாரதி பூங்கா விளங்குகிறது. புதுவை சட்டசபை, கவர்னர் மாளிகை அருகே அமைந்துள்ள இந்த பூங்காவில் மையப்பகுதியில் மாநில அரசின் சின்னமான ஆயி மண்டபம் அமைந்துள்ளது.

இந்த பூங்கா காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும். இங்கு குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல்கள், சறுக்குமரம், மர வீடு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. தற்போது இந்த பூங்காவின் ஒரு பகுதியில் வனவிலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. இது பூங்காவிற்கு வரும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

புல்தரை அமைக்கும் பணி

இந்த பூங்காவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூங்காவின் உள்பகுதியில் பார்வையாளர்கள் செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டது. சில குறிப்பிட்ட இடங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல முடியாதபடி கம்பி வேலி போடப்பட்டது.

தற்போது பூங்காவின் உள்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பழைய புல்தரை அகற்றப்பட்டு, புதிய புல் தரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமையடைந்தால் பூங்கா அழகாகவும், பசுமையாகவும் காட்சிஅளிக்கும்.

Next Story