சிவமொக்கா மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் - பா.ஜனதா கவுன்சிலர்கள் வாக்குவாதம் கூச்சல் - குழப்பம்; பரபரப்பு


சிவமொக்கா மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் - பா.ஜனதா கவுன்சிலர்கள் வாக்குவாதம் கூச்சல் - குழப்பம்; பரபரப்பு
x
தினத்தந்தி 1 July 2019 5:50 AM IST (Updated: 1 July 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூச்சல் - குழப்பம் உண்டாகி பரபரப்பும் ஏற்பட்டது.

சிவமொக்கா,

சிவமொக்கா மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் ருத்ரேகவுடா எம்.எல்.சி., நிலைக்குழு தலைவர் ஞானேஸ்வர், மாநகராட்சி கமிஷனர் சாருலதா சோமல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கவுன்சிலர்கள் அனைவரும் ஒருசேர கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதற்காக ஆண் நாய்களுக்கு தலா ரூ.475-ம், பெண் நாய்களுக்கு தலா ரூ.1,315-ம் செலவாகும் என கணக்கிடப்பட்டது. அவ்வாறாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் கணக்கிட்டு அவற்றுக்கு கருத்தடை செய்திட ரூ.30.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.

பின்னர் லண்டனில் வடிவமைத்து வழங்கப்பட்ட ஞானி பசவேஸ்வரரின் சிலையை சிவமொக்காவில் நிறுவ தாமதம் ஆவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சிலையை நிறுவ மாநில அரசிடம் அனுமதி கேட்டு அது நிராகரிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய ருத்ரேகவுடா எம்.எல்.சி., நிலைக்குழு தலைவர் ஞானேஸ்வர் ஆகியோர் உடனடியாக பசவேஸ்வரரின் சிலையை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிறுவிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அதையே மற்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

அதையடுத்து பேசிய மாநகராட்சி கமிஷனர் சாருலதா சோமல் விரைவில் பசவேஸ்வரரின் சிலையை நிறுவ முறைப்படி அனுமதி கோரி சிலை நிறுவப்படும் என்றார். பின்னர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விவாதம் நடந்தது. அப்போது கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மேயரும், துணை மேயரும் மழை பெய்தால் குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும் என்றும், இருப்பினும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

முடிவில் பேசிய சில காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி கவுன்சிலர்கள், நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் மக்களுக்கு பா.ஜனதாவினர் 1 லட்சம் லட்டுகளை இலவசமாக வழங்கினர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. பரபரப்பும் உண்டானது. இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரையும் மேயரும், துணை மேயரும் சேர்ந்து சமாதானம் செய்தனர்.

Next Story