ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பாதயாத்திரையால் கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது தேவேகவுடா பேட்டி
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பாதயாத்திரையால் கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தேவே கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், அந்த கட்சியால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதையடுத்து, ஜனதாதளம்(எஸ்) கட்சியை பலப்படுத்த அக்கட்சியினர் பாதயாத்திரை செல்ல உள்ளனர். இதுகுறித்து பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் தேவேகவுடா நேற்று ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஆகஸ்டு மாதம் 20-ந் தேதியில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளனர். எங்களது கட்சியின் பாதயாத்திரையால் கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாதயாத்திரையை நானே முன்னின்று நடத்துவதால், அரசுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாதவாறு பார்த்து கொள்வேன். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.
சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடைபெறலாம் என்பதால் பாதயாத்திரை மேற்கொள்ளவில்லை. பா.ஜனதாவினர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதுபற்றி கவலை இல்லை. கட்சியை பலப்படுத்த பாதயாத்திரை மேற்கொள்வோம். அரசுக்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்து கொள்வோம்.
ஆதிசுஞ்சனகிரி மடத்தின் சார்பாக அமெரிக்க நாட்டின் நியூஜெர்சி நகரில் கட்டப்பட உள்ள காலபைரவேஷ்வரா கோவில் பணிக்காக முதல்-மந்திரி குமாரசாமி சென்றுள்ளார். அமெரிக்காவுக்கு குமாரசாமி செல்வதற்கும், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவிடம் அனுமதி கேட்க வேண்டுமா?. அவரது அனுமதி பெற்று தான் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமா?.
அரசின் பணத்தில் முதல்-மந்திரி குமாரசாமி அமெரிக்காவுக்கு செல்லவில்லை. ஒரு மடம் கோவில் கட்டும் பணிக்காக முதல்-மந்திரி குமார சாமிக்கு அழைப்பு வந்தது. அதற்காக அவர் தனது சொந்த செலவில் சென்றுள்ளார். இதற்காக முதல்- மந்திரியை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story