கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்தபோது மோட்டார்சைக்கிளுடன் விழுந்த திருடன்
கணவர், மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த திருடன் மோட்டார்சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் தப்பி ஓடியவரை பெண்ணின் மகனே விரட்டிச்சென்று மடக்கி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் பாணாவரத்தை அடுத்த கோவிந்ததாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 60), விவசாயி. இவருடைய மனைவி ஜானகி (50). இவருடைய மகன் சரவணன் (22). மணியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.
நேற்று காலை மணி, ஜானகி, சரவணன் ஆகிய 3 பேரும் குழந்தையை பார்த்து விட்டு ஒரே மோட்டார்சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை மகன் சரவணன் ஓட்டினார், பின்னால் பெற்றோர் அமர்ந்திருந்தனர்.
பாணாவரம் அருகே மாலை 5 மணியளவில் வந்தபோது, அவர்களின் பின்னால் மற்றொரு மோட்டார்சைக்்கிளில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார்.
வேகமாக வந்த வாலிபர், திடீரென ஜானகியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துள்ளார். அந்த நேரத்தில் வாலிபர் நிலை தடுமாறி சிறிது தொலைவில் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
உடனே சரவணனும் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் வாலிபர், கீழே விழுந்த மோட்டார்சைக்கிளை அப்படியே போட்டு விட்டு 5 பவுன் சங்கிலியோடு தப்பியோடினார்.
வாலிபர் ஓட, அவரை விரட்டிக் கொண்டு சரவணன் ஓட, செய்வதறியாது திகைத்த வாலிபர் ஓரிடத்தில் சங்கிலியை வீசி விட்டு, மீண்டும் வேகமாக ஓடினார்.
ஆனால் விடாமல் விரட்டிச் சென்ற சரவணன், வாலிபரை மடக்கி பிடித்துச் கூச்சலிட்டார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, சங்கிலி பறித்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
விசாரணையில்அவர், ராணிப்பேட்டையை அடுத்த வாணாபாடி பகுதியைச் சேர்ந்த நவீன் (25) எனத் தெரிய வந்தது.அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story