தாளவாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தோட்டத்தில் தீப்பிடித்தது 3 ஏக்கரில் கரும்புகள் எரிந்து நாசம்
தாளவாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தோட்டத்தில்் தீப்பிடித்தது. இதில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் எரிந்து நாசம் ஆனது.
தாளவாடி,
தாளவாடி பனக்கள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி பசுவண்ணா. இவர் அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிட்டு உள்ளார். தற்போது அந்த கரும்புகள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கரும்பு தோட்டத்தின் அருகே செல்லும் உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து தோட்டத்துக்குள் விழுந்தது. இதன்காரணமாக மின்கம்பியில் இருந்து தீப்பொறிகள் ஏற்பட்டு கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது.
தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அக்கம் பக்கத்து விவசாயிகள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கும், சாம்ராஜ் நகர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் காற்று பலமாக வீசியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முற்றிலுமாக அணைக்கப்பட்டது. எனினும் 3 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் எரிந்து நாசம் ஆனது.
இதுகுறித்து விவசாயி பசுவண்ணா கூறுகையில், ‘3 ஏக்கர் பரப்பளவில் என்னுடைய தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தேன். தற்போது அந்த கரும்புகள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதில் நேற்று இரவு (நேற்று முன்தினம்) மின்கம்பி அறுந்து விழுந்ததால் கரும்புகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசம் ஆகிவிட்டது. இதனால் எனக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு தோட்டம் அருகே அமைக்கப்பட்டு உள்ள இரும்பு மின்கம்பங்கள் அனைத்தும் பழுதடைந்து காணப்பட்டு உள்ளது. அதனை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
அந்தியூர் அருகே மற்றொரு தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. காட்டூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 44). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எள் பயிரிட்டு இருந்தார். இந்தநிலையில் எள் அறுவடை செய்யப்பட்டு, நடராஜின் வீட்டின் அருகே காயவைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 12.30 மணி அளவில் எள் செடியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் எள் செடிகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிைலய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் காயவைக்கப்பட்டு இருந்த எள் செடிகள் முற்றிலுமாக எரிந்து நாசம் ஆனது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story