கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்


கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 July 2019 4:00 AM IST (Updated: 1 July 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 317 மனுக்களை கலெக்டர் பிரபாகரிடம் வழங்கினார்கள். அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) அலுவலகம் சார்பாக பணியிடத்து விபத்து மரணம் 13 பேருக்கு மொத்தம் ரூ. 15 லட்சமும், விபத்து மரண நிதி ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரமும், இயற்கை மரண நிதி 13 பேருக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் என மொத்தம் 27 பேரின் குடும்பத்திற்கு ரூ.18 லட்சத்து 71 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு இறப்பு நிவாரண நிதியாக ஒருவருக்கு ரூ.17 ஆயிரம் வீதம் 3 பேருக்கு ரூ.51 ஆயிரமும், தனி நபர் தொழில் தொடங்க 100 சதவீத மானியமாக ஒருவருக்கு ரூ.7,500- வீதம் 82 பேருக்கு மொத்தம் ரூ.6 லட்சத்து 15 ஆயிரம் என மொத்தம் 85 பேருக்கு ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story