கல்லல் ரெயில்நிலையம் முன்பு பல மாதங்களாக வீணாகி வரும் காவிரி கூட்டுக்குடிநீர்
கல்லல் ரெயில் நிலையம் முன்பு காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிதண்ணீர் வீணாகி வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லல்,
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் வறண்ட மாவட்டமாக இருப்பதால் இந்த இரு மாவட்டங்களில் கோடைக்காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து இந்த குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்திற்கு பின்னர் 2 மாவட்டங்களில் ஓரளவு குடிதண்ணீர் பற்றாக்குறை நீங்கி உள்ளது. இந்த திட்டத்திற்காக திருச்சி மாவட்டத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் செல்கிறது.
இந்தநிலையில் சமீபகாலமாக கல்லல், காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி உள்ளிட்ட பகுதியில் இந்த கூட்டுக்குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் அளவு குடிதண்ணீர் வீணாகி வருகிறது.
கடந்த சில தினங்களாக இளையான்குடி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்தும், சில இடங்களில் குழாய்கள் உடைக்கப்பட்டும் தண்ணீர் வீணாகி வருவது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது.
இதையடுத்து அந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சென்று பணியாளர்கள் மூலம் அதை சரிசெய்து வருகின்றனர். காரைக்குடி அருகே உள்ள கல்லல் ரெயில் நிலையம் முன்பு தேவகோட்டை சாலை பிரிவு பகுதியில் கடந்த சில மாதங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தற்போது பருவமழை பொய்த்து வறட்சியால் பொதுமக்கள் தண்ணீருக்காக அலைந்து வரும் வேளையில் இதுபோல் தண்ணீரை வீணாக்கி வருவது மிகவும் வேதனையளிக்கும் செயலாக உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப குடிதண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து குடிதண்ணீர் வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story