வங்கிக்கடன் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்கலாம் கலெக்டர் தகவல்


வங்கிக்கடன் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2019 3:15 AM IST (Updated: 1 July 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

வங்கிக்கடன் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்கலாம் என்று கலெக்டர் கூறினார்.

சிவகங்கை,

மாவட்ட தொழில் மையம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சி சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலெக்டர் பேசியதாவது:- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் மாவட்ட தொழில் மையங்கள், தொழில் வணிக ஆணையகத்தின் கண்காணிப்பில் கருத்தரங்கம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், பலருக்கு வேலைவாய்பை வழங்கிடும் வகையில் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு முறையான வழிகாட்டுதலின்படி இளைஞர்கள் வங்கிக்கடன் மூலம் தொழில் தொடங்க வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.

தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து முன்வந்தால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மேலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும், குறு, சிறு தொழில் மையங்கள் அமைத்திடவும், கடந்த ஆண்டு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் முனைவோரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் இருந்து தகுதியுள்ள நபர்களுக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் படித்த இளைஞர்கள் மாவட்ட தொழில் மையம் மூலமாக விண்ணப்பித்து தங்கள் கல்வித்தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும். மேலும் வங்கிக்கடன் மூலம் இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் தாண்டவன், மகளிர் கல்லூரி முதல்வர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story