உச்சிப்புளி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்
உச்சிப்புளி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.
ராமநாதபுரம்,
உச்சிப்புளி பகுதி பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் அசரியா, செயலாளர் வேணுகோபால், பொருளாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் அப்துல் வகாப், துணை செயலாளர் அர்ச்சுனன், தி.மு.க. பிரமுகர் ரவிச்சந்திரன் உள்பட வர்த்தக சங்கத்தினர் நவாஸ்கனி எம்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் இந்திய கடற்படை, விமானதளம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பல்கலைக்கழக கடல் சார் ஆராய்ச்சி மையம், எம்.ஜி.ஆர். ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளன. உச்சிப்புளி ரெயில் நிலையத்தை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 42 கிராமங்களில் உள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களில் ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலத்திலும் தொழில் செய்தும் பணியில் இருந்தும் வருகின்றனர். இவர்கள் ராமநாதபுரம் சென்று அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். எனவே ராமேசுவரம்-சென்னை, சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உச்சிப்புளி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி. உச்சிப்புளி ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு உச்சிப்புளி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். முன்னதாக அவரை என்மனம்கொண்டான் ஜமாத்தார்கள் அப்துல்லா,அப்துல்மாலிக், புது நகரம் ஜமாத்தினர் சீனி,முகமது நஜீப் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். எம்.பி.யுடன் முஸ்லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வரிசை முகமது, கல்கிணற்றுவலசை தி.மு.க. பிரமுகர் கோவிந்தமூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர்.
Related Tags :
Next Story