தெலுங்கானாவில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயிலில் சேதமடைந்த வேகன்களில் வந்த உர மூட்டைகள்


தெலுங்கானாவில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயிலில் சேதமடைந்த வேகன்களில் வந்த உர மூட்டைகள்
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 1 July 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயிலில் சேதமடைந்த வேகன்களில் உர மூட்டைகள் வந்தது. சேதமடைந்த வேகன்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே குட்ஷெட் யார்டு உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலம் திருச்சிக்கு வரும் நெல், சிமெண்டு, அரிசி, கோதுமை, உர மூட்டைகள், இரும்புகள் உள்ளிட்டவை குட்ஷெட் யார்டில் வைத்து இறக்கி லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 58 வேகன்களில் 3,580 டன் உர மூட்டைகள் நேற்று திருச்சிக்கு வந்தது. குட்ஷெட் யார்டில் உர மூட்டைகளை சரக்கு ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள், சுமை தூக்கும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சரக்கு ரெயிலில் 10-க்கும் மேற்பட்ட வேகன்களில் கதவுகள் பல சேதமடைந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உர மூட்டைகளை ஏற்றிய பின் கதவு சரியாக பூட்ட முடியாததால் அதனை கட்டு கம்பியால் கட்டி வைத்திருந்ததை தொழிலாளர்கள் கண்டனர். கதவுகளின் இடைவெளி வழியாக உர மூட்டைகள் பல தொங்கி கொண்டிருந்தன. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல ஒரு வேகனில் இரு கதவுகள் முற்றிலும் சேதமடைந்திருந்தன.

சேதமடைந்த வேகன்கள் குறித்து அங்கிருந்த தொழிலாளர்கள் கூறுகையில், “சரக்கு ரெயிலில் பல வேகன்கள் சேதமடைந்து தான் காணப்படுகிறது. அந்த வேகன்கள் தயாரிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டதாலும், வேகன்களில் கதவுகளை திறக்கும் போது சில இடங்களில் பொக்லைன் எந்திரமும் பயன்படுத்துகின்றனர். இதனால் வேகன்களின் கதவுகள் பல சேதமடைகிறது. அதனை சீரமைக்க ரெயில்வே நிர்வாகம் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனை மீண்டும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இதனால் வேகன்களில் சரக்குகள் ஏற்றிய பின் சரியாக மூடப்படாமல் வரும்.

இதுபோன்ற வேகன்களில் இடைவெளி வழியாக மூட்டைகள் கீழே விழும் என்பதில் சந்தேகமில்லை. ஓரிரு மூட்டைகள் விழுந்தால் எடையை கணக்கிடும் போது பெரிதாக தெரிவதில்லை. சரக்கு ரெயில் வேகன்களில் சேதமடைந்ததை மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதேபோல சரக்குகளை கையாளும் ஒப்பந்ததாரர்களும் ரெயில்வே நிர்வாகத்தினருக்கு கோரிக்கைவிடுத்தனர். சரக்கு ரெயில் வேகன்களில் இருந்து உர மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். கொட்டப்பட்டு பால்பண்ணை உள்ள குடோனுக்கு உர மூட்டைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து திருச்சி கூட்டுறவு சங்கங்களுக்கும், பக்கத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதேபோல திருவனந்தபுரத்தில் இருந்து 2,600 டன் உர மூட்டைகள் சரக்கு ரெயிலில் நேற்று முன்தினம் திருச்சி வந்திருந்தது. அவை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story