மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: உதவி பேராசிரியர் இளங்கோவனுக்கு ஜாமீன்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: உதவி பேராசிரியர் இளங்கோவனுக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 1 July 2019 10:15 PM GMT (Updated: 1 July 2019 5:27 PM GMT)

கரூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உதவி பேராசிரியர் இளங்கோவனுக்கு ஜாமீன் வழங்கி கரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை அரசு கல்லூரியின் பொருளாதார துறை தலைவரும், உதவி பேராசிரியருமான இளங்கோவன் (வயது 53) தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் கரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் நீதிபதி முன்பு ஆஜராகி, தங்களுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து எடுத்து கூறி வாக்குமூலம் அளித்தனர். அந்த சமயத்தில் இளங்கோவனுக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது குற்றவாளி தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இளங்கோவனுடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் 90 நாட்களாகியும் போலீஸ் தரப்பிலிருந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிகிறது. இது இளங்கோவனுக்கு ஜாமீன் கிடைக்க வழிவகுக்கும் வகையில் அமைந்தது. மேலும் இளங்கோவன் தரப்பில் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா ஆஜரானார்.

அப்போது, ‘ஏன் 90 நாட்களாகியும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை?’ எனக்கேட்டு நீதிபதி கிறிஸ்டோபர் அவரை கடிந்து கொண்டார். மேலும் தேர்தல் பணி உள்ளிட்ட காரணங்களையெல்லாம் கூறாதீர்கள். வழக்கின் தன்மையை பொறுத்து கடமையை ஆற்ற முன்வாருங்கள் என கேட்டு கொண்டார். மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 1-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதன் பேரில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கின் முன்னேற்ற நிலை குறித்த விவரத்தினை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தாக்கல் செய்தார். அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முருகேசன் உள்ளிட்டோர் வாதாடுகையில், பாலியல் ரீதியான வழக்கில் போலீஸ் தரப்பின் விசாரணை தொய்வாக உள்ளது. தற்போது கூட குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்படும்போது, அது மாணவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தனர்.

குற்றவாளி தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களை நீதிபதி கிறிஸ்டோபர் கேட்டறிந்தார். பின்னர், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் குற்றவாளி இளங்கோவனுக்கு சிதம்பரம் ஜே.எம்.1 கோர்ட்டில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி மறுஉத்தரவு வரும் வரை கையெழுத்திடுவது என்கிற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story