உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 July 2019 3:45 AM IST (Updated: 1 July 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என நெல்லையில் நடந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமை தாங்கினார்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக எந்தெந்த இடங்களில் தண்ணீர் எடுக்கப்படுகிறதோ அந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டி பராமரிக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

அரசு பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வறட்சி காலங்களில் குளங்களை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும். குளங்களின் கரைகளை பலப்படுத்தி மரக்கன்றுகளை நட வேண்டும். நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். வட்டார, நகர, கிராம கமிட்டி அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார நகர மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story