சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தினால் மாற்று இடம் வழங்க வேண்டும் கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தினால் அதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் நேற்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
குருபரப்பள்ளியில் 100 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக கடந்த 150 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள நிலங்களை சமன்படுத்தி, ராகி, நெல், அவரை, துவரை மற்றும் நெல் போன்ற பயிர்களோடு மா, தென்னை, தேக்கு போன்ற மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலங்களை தவிர எங்களுக்கு வேறு எதுவும் கிடையாது.
தற்போது அரசு சிப்காட் அமைக்க இந்த நிலங்களை கையகப்படுத்துவதாக தெரிகிறது. அவ்வாறு கையகப்படுத்தினால் பல குடும்பங்கள் ஆதரவின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, எங்களுக்கு மாற்று இடமோ அல்லது இழப்பீடோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
காவேரிப்பட்டணம் வீரசைவ லிங்காயத்தார் நலச்சங்கத்தின் தலைவர் விருபாட்சன் தலைமையில், நிர்வாகிகள் சிலர் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காவேரிப்பட்டணம் நகரில் ஊர் பொது சுடுகாட்டிற்கு வடக்கு புறம் வீரசைவ லிங்காயத்து சமூகத்திற்கான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை பல்வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் குளியல், கழிவறைகளை கட்டி உள்ளதால், எங்கள் சமூக மக்கள் இறந்தால் புதைக்கும் போது மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, எங்கள் சமூகத்திற்கான சுடுகாட்டினை அளந்து நான்கு புறமும் எல்லையை நிர்ணயித்து எங்கள் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகள் நடக்காதவாறு சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story