தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு போலீஸ் லஞ்சம் வாங்குவது போல் நூதன போராட்டம் நடத்திய முதியவர்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு போலீஸ் லஞ்சம் வாங்குவது போல் நூதன போராட்டம் நடத்திய முதியவர்
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 1 July 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் லஞ்சம் வாங்குவது போல் நூதன போராட்டம் நடத்திய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு டூவிபுரம் 7-வது தெருவை சேர்ந்த வக்கீல் தொண்டன் சுப்பிரமணி (வயது 65) என்பவர் வந்தார்.

போலீஸ் உடையில் வந்த அவர் தனது கார் டிரைவரை வழிமறித்து அவரிடம் லஞ்சம் கேட்பது போல் கேட்டு நூதன போராட்டம் நடத்தினார். இதனை அறிந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், தொண்டன் சுப்பிரமணியிடம் விசாரணை நடத்தி அவரை கண்டித்து அனுப்பி வைத்தார். இந்த நூதன போராட்டத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டன் சுப்பிரமணி கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னிடம் லஞ்சம் கேட்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். அது குறித்து நடவடிக்கை எடுக்காததால் தற்போது போலீஸ் லஞ்சம் வாங்குவது போல் நூதன போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story