காதலித்து திருமணம் செய்த மனைவி கோபித்துச் சென்றதால் ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


காதலித்து திருமணம் செய்த மனைவி கோபித்துச் சென்றதால் ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2019 4:00 AM IST (Updated: 2 July 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்த மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏ.சி. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி கிராமம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 26), ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ராகபிரியா (24).

திருச்செந்தூரை சேர்ந்த ராகபிரியாவும், பிரகாசும் காதலித்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பும் அதேபோல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ராகபிரியா திருச்செந்தூரில் உள்ள தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சூரியபிரகாஷ் செல்போன் மூலம் மனைவி ராகபிரியாவிடம் பேசினார். அப்போது உடனடியாக குடும்பம் நடத்த வராவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார்.

அதைக் கேட்டதும் ராக பிரியா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்தார். இங்கு வீட்டுக்கு வந்ததும் வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இ்ருந்ததால் ஜன்னல் வழியாக கணவரை அழைக்க முடிவு செய்து பார்த்தார்.

அப்போது கணவர் வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூரியபிரகாசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story