கிருஷ்ணகிரி அருகே விஷம் கலந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் செத்தன
கிருஷ்ணகிரி அருகே விஷம் கலந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் செத்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 70). விவசாயி. இவர் 17 ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் அவர் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய விட்டு அந்த பகுதியில் உள்ள சுனைக்கு அழைத்து சென்று தண்ணீர் குடிக்க வைத்து மீண்டும் மாலை வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அதே போல நேற்று காலை பரமசிவம் தான் வளர்த்து வந்த 17 ஆடுகளையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் 17 ஆடுகளில் 14 ஆடுகள் அந்த பகுதியில் உள்ள சுனை தண்ணீரை குடித்தன. சிறிது நேரத்தில் அவை ஒவ்வொன்றாக வாயில் ரத்தம் வந்து செத்தன. 14 ஆடுகளும் அடுத்தடுத்து ரத்தம் வந்து இறந்ததை கண்டு பரமசிவம் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் அந்த பகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் வந்தார். அவர் இது குறித்து போலீசார், கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். தண்ணீரை குடிக்காததால் 3 ஆடுகள் உயிர் தப்பியது.
விஷம் கலந்த தண்ணீரை ஆடுகள் குடித்ததால் அவை செத்ததாக கூறப்படுகிறது. தனக்கு வாழ்வாதாரமாக விளங்கிய ஆடுகள் இறந்து விட்டதாக கூறி விவசாயி பரமசிவம் கதறி அழுதார். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம். ராமகவுண்டர் கூறியதாவது:-
வழக்கமாக ஆடுகள் தண்ணீர் குடிக்க கூடிய சுனையில் யாரோ விஷத்தை கலந்து உள்ளனர். அதனால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் இறந்து விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயி பரமசிவத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுணையில் விஷம் கலந்தவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story