குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு: கலெக்டர் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி


குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு: கலெக்டர் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். இதே போல் நிவாரணம் தராததால் குழந்தைகளுடன் விவசாயி தர்ணாவில் ஈடுபட்டார். இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் போது தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த மங்களமேரி (வயது62) என்பவர் வந்தார். அவர் திடீரென கலெக்டர் முன்பு வந்த போது தான் வைத்திருந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைப்பார்த்த அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரிடம் இருந்த பாட்டிலை பிடுங்கி, மூதாட்டியை அழைத்துச்சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மங்களமேரி கூறுகையில், தனக்கு 3 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் தனது 10 சென்ட் நிலத்தை பறித்துவைத்துக்கொண்டு தர மறுப்பதாக, இது குறித்து கலெக்டரிடம் 2 முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என்றார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. போலீசார் பொதுமக்களின் உடைமைகளை கடும் சோதனை செய்த பின்னரே அவர்களை உள்ளே அனுமதிப்பார்கள். ஆனால் அதையும் மீறி மங்களமேரி மண்எண்ணெய் பாட்டிலை எடுத்துச்சென்று தீக்குளிக்க முயன்றது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த காலகத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. இவர் தனது குழந்தைகள் 3 பேருடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், “தனக்கு சொந்தமான 5 ஏக்கரில் 350 தென்னைமரங்கள் இருந்தன. அவை கஜா புயலால் முற்றிலும் சேதம் அடைந்தன. ஆனால் இதற்கு எந்த நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை. சாப்பாட்டிற்கு வழி இல்லை. வேறு விவசாயமும் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக 20 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என்றார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். பின்னர் நிவாரணம் குறித்து ரவிச்சந்திரன் மனு அளித்தார். அதற்கு கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story