சேலத்தில் குறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்களிடம் இருந்து 387 மனுக்கள் பெறப்பட்டன


சேலத்தில் குறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்களிடம் இருந்து 387 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 2 July 2019 3:30 AM IST (Updated: 2 July 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 387 மனுக்கள் பொதுமக் களிடம் இருந்து பெறப் பட்டன.

சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அவரிடம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 387 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்ற அவர், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாற்றுத் திறனாளிகளின் மனுக்களின் மீது எவ்வித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 2 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மடக்குக்குச்சிகள், ஒருவருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செயற்கை உபகரணம், ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான முடநீக்கு சாதனம், 2 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவி ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.9 ஆயிரத்து 700 மதிப்பிலான தையல் எந்திரம் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story